வைக்கம் போராட்டம் பற்றிய சிறப்பான கட்டுரை

மானமிகு “கவிஞர்” அவர்களுக்கு வணக்கம்! கடந்த 20.06.2019ஆம் தேதியிட்ட நமது ‘விடுதலை’யில் தாங்கள் எழுதியிருந்த “வைக்கம் போராட்டத்தை திசை திருப்பும் வக்கிரப்புத்தி குருமூர்த்திகள்” என்ற கட்டுரையை முழுமையாக படித்த பிறகு உங்களை பாராட்ட வேண்டுமென் பதற்காக மட்டுமல்ல, சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவும் இந்தக் கடிதம் எழுதிடுகின்றேன்.

அந்தக் கட்டுரையில் “வைக்கம் போராட்டம்” அதன் பிதாமகன்”‘ தலைவர் தந்தை பெரியார் அவர்களால் எப்பொழுது, எந்த தேதியில் நடத்தப் பட்டது என்றும், அதன் பின்னணி மற்றும் அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளை தேதிவாரியாக ஆணித் தரமாக பட்டியலிட்டுள்ளீர்கள். இது “குருமுர்த்தி அய்யரின்” நடுமண்டையில் ஓங்கி வைத்த மிகப்பெரிய குட்டு. மேலும் “துக்ளக் குருமுர்த்தி களுக்கு மட்டுமல்ல, ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகளாகவும், இனத்தைக் காட்டி கொடுக்கும் எட்டப்பர்களாகவும், விபீடணர்களாகவும் இருந்து பிழைப்புக்கு அவர்களை தூக்கி வைத்துக்கொண் டாடும் சூத்திரத் தமிழர்களுக்கு” இந்த கட்டுரை மிகப்பெரிய படிப்பினையாக அமைந்துள்ளது.

அதுமட்டுமல்ல, குருமூர்த்திகளின் தலைவனாக இருந்த ராஜாஜி அவர்களே இந்த போராட்டத்தின் வெற்றி, புகழ், தந்தை பெரியாருக்கு முழுவதுமாக சென்று விடக்கூடாதென்பதற்காக, கடைசி கட்டத்தில் காந்தியாரிடம் சொல்லி திருவாங்கூர் சமஸ்தான ராணியிடம் பேச வைத்த “குல்லுகப்பட்டர் ராஜாஜியின்” இனத்திற்கே உண்டான வேலையை இக்கட்டுரை தோலுரித்துக் காட்டியுள்ளது”

26.06.2019ஆம் தேதியிட்ட துக்ளக் வார இதழில் மூன்று வரியில் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பெருமையை குறைக்க வேண்டுமென்று வரலாறே தெரியாமலும் அல்லது தெரிந்துகொண்டே எழுதிய குருமுர்த்திக்கு பதிலாக தாங்கள் ‘விடுதலை’யில் இரண்டு முழு பக்கங்களில் எழுதிய பதில் மிகத் தெளிவாக இருப்பதோடு வரலாற்று பூர்வமான உண்மையாகவும் இருக்கிறது.

“நாயும், கழுதையும், பன்றியும் வைக்கம் தெருக்களில் தாராளமாக நடமாடுகின்றனவே தாழ்த் தப்பட்டவர்கள் அந்த தெருவில் நடக்க கூடாதா” என்று வரலாற்று பூர்வமான போராட்டத்தை 1924ஆம் ஆண்டே முன்னெடுத்து அதில் வெற்றியும் பெற்று இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ்ந்த தலைவர் தந்தை பெரியார் அவர்களின் போராட் டத்தையும், தியாகத்தையும் இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கிய துக்ளக் குருமூர்த்திக்கு ஒரு வகையில் நன்றி சொல்லலாம்.

காலங்காலங்கமாக தாழ்த்தப்பட்டவர்களை மதத்தின் பெயரில், புராண இதிகாசத்தின் பெயரில், பிறப்பை காரணம் காட்டி தொடக்கூடாத சமுக மாகவும், படிக்கக்கூடாத சமுகமாகவும் வைத்திருந்த ஆரிய சனாதானத்திற்கு எதிராக தலைவர் தந்தை பெரியாருக்குப் பிறகும், அன்னை மணியம்மை யாருக்குப் பிறகும், தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் இந்த இயக்கத்தை இந்திய துணைக்கண்டம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் மிக எழுச்சியோடு எடுத்துச் சென்று உழைத்துக் கொண்டிருக்கிறார்.

தந்தை பெரியார் பெயர் இன்னும் 500 ஆண்டு களுக்கு இந்தியாவில் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதற்கு உதாராணமாகத்தான் இந்திய நாடா ளுமன்ற மய்ய மண்டபத்தில் தந்தை பெரியார் பெயர் வேகமாக கடந்த வாரத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒலிக்கப்பட்டது.

இந்த சூழலில் திராவிடர் கழகத்திற்கும், அதன் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் உற்றத்துணையாகவும், வரலாற்று நிகழ்வுகளின் ‘கருத்து களஞ்சியமாகவும்’ இருந்து, இன எதிரிகளுக்கு நேரம் பார்த்து ஆதாரங்களை அடுக்கி பதில் சொல்லும் தங்கள் பணி இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு மேல் தொடர வேண்டும் என்று தங்களை பாராட்டுகிறேன்.

– கே. செல்வராஜ் பிஎஸ்சி., பி.எல்.,

தி.மு.க. வழக்குரைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்,

தாராபுரம், திருப்பூர் தெற்கு மாவட்டம்