புத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (5)

“கட்டுப்பாடான ஒழுங்கு முறையோடு இயங்கும் உள்ளத்திற்கும், ஒழுங்கற்று, கட்டுப் பாடின்றி செயல்படும் உள்ளத்திற்கும் – மனதிற் கும் உள்ள வேறுபாடு பற்றி ஒவ்வொருவரும் சிந்தித்து உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒழுங்கற்ற மனதினால் ஏற்படக் கூடிய கேடுகள் – நம் வாழ்வில் மிக மிக அதிகம்; எந்த அளவு அந்தக் கேடுகள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் எதிரிகளும், உங்களை மனதார வெறுப்பவர்களும் எவ் வளவு கேடு செய்வார்களோ அதைவிட பன்மடங்கு உங்களுக்கு உள்ளே இருந்தே ஏற்படக் கூடும்; மற்றவர்கள் வெளியே இருந்து கேடு செய்யும் பகைவர்கள்; செம்மையற்ற மனமோ உள்ளிருந்தே கெடுக்கும் என்பதை அறிக.

அதே நேரத்தில் முறை யாக கட்டுப் பாட்டுடன், ஒழுங்கு முறைக்கு உட்பட்டு இயங் கும் மனம் செய்யும் நன்மை களே அநேகம்! அநேகம்!!

உங்கள் தாய் – தந்தையர் உங்கள்பால் அக்கறை கொண்டு செய்யும் நன்மை களை விட மிக அதிகமான பங்களிப்பு மேலே காட்டிய ஒழுங்குடன் இயங்கும் மனதின் சிறப்புக் காணிக் கையாகும்! யாருக்கும் கெடுதி செய்யாத அறி வார்ந்த நற்செயல்கள் நல்ல பூக்களின் நறுமணவாசம் எப்படி வீசிக் கொண்டே உள்ளதோ, அது போன்று அதன் விற்பனை மற்றவர்களிடையே பரப்புவது உறுதி!

இதன் பயனுறு நல்ல விளைவுகள் அடுத் தடுத்த தலைமுறைகளையும் நல்வழிப்படுத்த உதவும் என்பதே முக்கிய கருத்து – மூதுரை என்பதாகும்.

தேனீக்கள் மலர்களிலிருந்து தேனைச் சேகரிக்கின்றன; பிறருக்கு அவை தொல்லை கொடுப்பதில்லை. (பிறர் அவைகளைத் தொந் தரவு செய்து அவைகளின் உழைப்பைச் சுரண்டி திருட முயலும்போதுதானே அவை தங்களது உடமையை, உழைப்பை, உரிமையை நிலை நாட்ட தங்களிடமிருக்கும் ஆயுதத்தைப் பிரயோகப் படுத்தி – கொட்டுகின்றன! தேன்கூட்டைக் கலைக்க முயலும் மனிதர்களைத் தங்களின் எதிரிகளாகக் கருதி எதிர்த்துப் போர் புரிய முற் படுவது எப்படி தவறாகும்?)

அவை தேனைச் சேகரிக்கும் போது, செடிகளுக்குக்கூட தொந்தரவு இல்லாமல் அல்லவா மிக லாவகமாகத் தேனைச் சேகரிக் கின்றன! – இல்லையா?

அதுபோல இயற்கையை தொந்தரவு செய்யாமல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.

2500 ஆண்டுகளுக்கு முன்னரே சுற்றுச் சூழலை மனிதர்கள் பாதுகாக்க உரிய மிக முக்கிய அறிவுரை அல்லவா இது!

பலர் எதை போதிக்கிறார்களோ அதை அவர்கள் வாழ்வில் கடைப்பிடிப்பதே இல்லை. சொல்வதை செய்யாத சோரம் போன அந்த மனித வாழ்வு எப்படிப்பட்டது தெரியுமா?

புத்தர் அறிவுச் சாட்டையை – தனது புத்தி கூர்மையால் கடிதோச்சி மெல்ல எறிகிறார்!

“பல வண்ண வண்ண மலர்களுக்கு மணம் இல்லை என்றால் எப்படியோ அப்படித்தான் அத்தகையவர்கள் வாழ்வு. காலையில் பூத்து மாலையில் மடிந்து விடும் வாழ்வு.

ஆனால் சொன்னதை செய்வது, போதிப் பதை சாதிப்பது, கொள்கைகளைப் பின்பற்றுவது வண்ணங்களுடன் எளிதில் மாறாத நறுமணம் உள்ள மலர்களைப் போன்றது” என்கிறார்!

இந்த உவமை நயத்தில்  ஆழ்ந்த கருத்து ஒன்று உண்டு; வண்ணங்கள் பார்த்த பிறகே ஈர்ப்புக்குரியவை; மனமோ, நற்வாசனையை பார்க்காமலே எட்டு திசையிலும் பரவி காணுமுன்பே ஈர்த்து அனுபவிக்க மக்களைக் கூட்டும் அல்லவா! பார்க்காமலே ஈர்ப்பதுதான் புகழுக்கு முன்னுரை; புரிந்து கொள்வோம்.

(புத்தர் வருவார்)